செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c092ad81-2939-42db-bac8-5a6e657feb76
-

வீட்டில் பட்டாசு தயாரித்தபோது விபத்து: இளையர் பலி; இருவர் படுகாயம்

மதுரை: அனுமதி இன்றி வீட்டிலேயே பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட திடீர் விபத்தில் உசிலம்பட்டியைச் சேர்ந்த 27 வயதான அஜித் என்ற இளையர் பலியானார். சிவகாசியில் பட்டாசுக்கடை நடத்தி வரும் பிரவீன் என்பவரின் வீட்டில் அனுமதி இன்றி இவ்வாறு பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் பட்டாசுகள் திடீரென வெடித்ததில் அந்த வீட்டின் மாடி இடிந்து விழுந்தது. இதில், அஜித் உடல் சிதறி பலியானார். அந்த வீட்டின் கீழ் பகுதியில் குடியிருந்த 22 வயதான பெண்ணும் அவரது ஆறு மாதக் கைக்குழந்தையும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.

குக்கரின் அடிப்பகுதியில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 69.42 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் சென்னை வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒரு பயணி, மின் குக்கரின் அடிப்பகுதியில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.13.42 லட்சம் மதிப்புள்ள 299 கிராம் தங்கத்தை அவர் மறைத்து வைத்திருந்தார். இதேபோல் மற்றொரு பயணியிடம் இருந்து 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 290 கிராம் தங்கமும் விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த இரண்டு உறைகளில் இருந்து ரூ.42.98 மதிப்புள்ள 963 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

இஸ்‌ரோவுக்கு நன்றி கூறிய விவசாயிகள்

தி.மலை: இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம் (இஸ்‌ரோ) அண்மையில் வேளாண் பணிகளுக்கு உதவும் வகையில் புதிய செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தி உள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். "இப்புதிய செயற்கைக்கோள் நிலவளம், நீர் வளம், பருவ கால மாற்றம் ஆகியவை குறித்து முன்கூட்டியே துல்லியமாகக் கணக்கிட்டு படங்களை எடுத்து அனுப்பும். இதன் மூலம் விவசாயிகள் திட்டமிட்டுச் செயல்பட முடியும்," என அம்மாவட்ட உழவர் பேரவை தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவி லாவண்யா மரண வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம்

தஞ்சை: மதமாற்ற விவகாரம் காரணமாக, தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா (17 வயது) உயிரை மாய்த்துக்கொண்ட தாக புகார் எழுந்துள்ள நிலையில், அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, சிபிஐ நான்கு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளது.