செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
72017b96-a543-4cee-99db-866edfb91c98
-

திமுக வேட்பாளர்கள்

மாரடைப்பால் உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சி ஒன்பதாவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அனுசுயா, 58, பிரசாரத்தின்போது மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைய இருந்த நிலையில், அவர் திடீரென்று உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் ேசாகத்தை ஏற்படுத்தியது. மேலும், நேற்று காலை ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை திமுக வேட்பாளர் சித்தி ரெட்டி என்பவரும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். நேற்று முன்தினம் இரவு பிரசாரம் முடித்து விட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சித்துரெட்டி நேற்று அதிகாலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

'ஏப்ரல் அல்லது ஜூன் மாதத்தில் ரூ.1,000 வழங்கப்படும்'

புதுக்கோட்டை: தேர்தல் வாக்குறுதி என்பது மலை ஏறுவது போல் படிப்படியாகத்தான் ஏறவேண்டுமே தவிர குரங்கு போல் தாவ முடியாது என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அவர், "குடும்பத் தலைவிகளின் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் முடிந்தவுடன் ஏப்ரல் அல்லது ஜூன் மாதத்திற்குள் ரூ.1,000 வழங்கப்படும்," எனக் கூறினார்.

மகாமகக் குளத்தில் திரளான பக்தர்கள் புனித நீராடி தரிசனம்

கும்பகோணம்: கும்பகோணம் மகாமகக் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகத் திருவிழா நடைபெறும். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தின் போது நடைபெறும் மாசிமகத் திருவிழா இந்தாண்டும் நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை மாசி மக தீர்த்தவாரியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு மகாமகக் குளக்கரையில் தர்ப்பணம் செய்து பூஜை நடத்தி வழிபட்டனர்.

60 வயதுக்கு மேலான நீரிழிவு நோயாளிகளுக்கு பரிசோதனை

சென்னை: யார் யாருக்கு கொவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினை உடையவர்கள், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சித்ரா ராமகிருஷ்ணனுக்குச்

சொந்தமான இடங்களில் சோதனை

சென்னை: தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணனின் சென்னை சோலையூர், அண்ணா சாலையில் உள்ள வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் அவருக்குத் தொடர்பான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.