சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 47 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்தடைந்தவர்கள் வெவ்வேறு வாகனங்களில் சொந்த ஊருக்குப் பயணம் சென்றனர்.
ராமேஸ்வரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, கடந்த 2021 டிசம்பரில் 56 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இைதத்தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்தன.
மீனவர்கள் 56 பேரையும் கடந்த மாதம் இலங்கை நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்களில் பல மீனவர்களுக்கு கொவிட்-19 தொற்று இருந்தது உறுதியான நிலையில், அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. இலங்கையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாதிப்பு இல்லாத ஒன்பது மீனவர்கள் மட்டும் கடந்த 10ஆம் தேதி தமிழகம் வந்து சேர்ந்தனர்.
மீதமுள்ள 47 மீனவர்களும் கொரோனா தொற்றில் இருந்து முற்றிலும் குணமடைந்த நிலையில் நேற்று அதிகாலை விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர். மீன்வளத் துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.

