ருமேனியா நாட்டவருக்கு நோட்டீஸ்
சென்னை: கோவையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த ருமேனியா நாட்டைச் சேர்ந்த நேகோய்டா ஸ்டீபன் மாரியஸ் என்பவருக்கு விசா விதிமுறையை மீறியதாக மத்திய அரசின் கீழ் இயங்கும் குடியுரிமைத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
விதிமீறல் குறித்து விளக்கமளிக்க உரிய ஆவணங் களுடன் சென்னை சாஸ்திரி பவன் அலுவலகத்துக்கு வரும்படியும் நேகோய்டாவுக்கு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
'உங்களில் ஒருவன்' நூலை வெளியிடும் ராகுல் காந்தி
சென்னை: தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதிய 'உங்களில் ஒருவன்' நூலை சென்னையில் இம்மாதம் 28ஆம் தேதி ராகுல் காந்தி எம்.பி. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெளியிட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினாா். கேரள முதல்வா் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீா் மாநில முன்னாள் முதல்வா் உமா் அப்துல்லா, பீகார் மாநிலத்தின் எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர். திமுக பொதுச்செயலா் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் கவிஞா் வைரமுத்து, நடிகா் சத்யராஜ் ஆகியோா் சிறப்புரையாற்ற உள்ளனா் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
காரைக்குடி-திருச்சி இடையே தொடர்ந்த சோதனை ஓட்டம்
காரைக்குடி-திருச்சி இடையே சோதனை ஓட்டமாக இயக்கப்பட்ட மின்சார ரயில். படம்: ஊடகம்
காரைக்குடி: திருச்சி-புதுக்கோட்டை-காரைக்குடி இடையே ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி நிறைவடைந்தது. இதனையடுத்து காரைக்குடி-திருச்சி ரயில் பாதையில் முதன்முதலாக மின்சார ரயிலை இயக்கி சோதனை நடத்திப் பார்த்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் வழித்தடங்களையும் 2027க்குள் மின்மயமாக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், காரைக்குடி ரயில் நிலையத்தில் தயாராக இருந்த மின்சார ரயிலுக்கு சந்தனம், குங்குமம், மலர்மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து வழிபாடு செய்த பின்னர் காரைக்குடி-புதுக்கோட்டை-திருச்சி வழித்தடத்தில் மின்சார ரயிலின் சிறப்புச் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

