சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது ஒருசில இடங்களில் ஆளுங்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிமுக, பாஜக, மநீம உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
முறைகேடு நடைபெற்ற 26 வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப் பதிவு நடத்தக் கோரி அதிமுக சார்பில் மாநிலத் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமாரை சந்தித்து அதிமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் புகார் மனு அளித்தார்.
அதில், முறைகேடு நடைபெற்ற வார்டுகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டு கள்ள வாக்குகள் போட்டப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணை யரிடமும் அதிமுக புகார் அளித்துள்ளது.
பாபு முருகவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சென்னையில் பல வாக்குச்சாவடிகளில் இருந்த முகவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. திமுகவினர் கள்ள வாக்கு போட்டது தொடர்பான காணொளியை காவல் ஆணையரிடம் வழங்கியுள்ளோம்," என்றார்.
இதேபோல், மாநிலம் முழு வதும் வாக்குப்பதிவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மநீம கட்சி யினர் கோயம்பேடு தேர்தல் ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலை ரத்து செய்யவேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.

