கொழும்பு: ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் தங்களது எல்லை யைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அத்துடன், மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அவர்களை இலங்கை மயலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, அந்நாட்டு நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிலைப்படுத்தப் பட்டனர். ஆறு பேரையும் வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, மத்திய அரசு, இலங்கை அரசைத் தொடர்பு கொண்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க இலங்கையிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் வலியுறுத்தி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், நேற்று முன்தினம் நள்ளிரவில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் ஆறு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் படகு களையும் பறிமுதல் செய்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனால் மீனவக் குடும்பங்கள் துயரத்தில் உள்ளன.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் சிறையில் அடைப்பதும் படகுகளை பறிமுதல் செய்வதும் இதுதொடர்பாக அரசியல் கட்சிகள் கோரிக்கை வைப்பதும் காலம் கடந்து மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதும் தொடர்கதையாக நீள்கிறது என்று கூறியுள்ளார்.
இதேபோல், பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில்,
"ஆறு மீனவர்களைக் கைது செய்திருப்பது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும். மீனவர்களை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் விரைந்து நட வடிக்கை எடுக்கவேண்டும்," என்று வலியுறுத்தி உள்ளார்.

