புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் புதுமணத் தம்பதிக்குத் தமிழ்ப் புத்தகங்களைச் சீர்வரிசையாகக் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
செம்மொழியான தமிழ்மொழியின் சிறப்பை அடுத்து வரும் தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் விதமாக ஆசிரியர்கள், மருத்துவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரையும் ஒருங்கிணைத்து "தமிழினி வாட்ஸ்அப் தளம்" செயல்பட்டு வருகிறது.
இத்தளத்தின் கௌரவத் தலை வராக முன்னாள் சாகித்திய அகாடமி குழுவின் உறுப்பினரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிஞருமான தங்கம் மூர்த்தி இருந்து வருகிறார். இந்நிலையில், இவரது மகள் காவியாமூர்த்தியின் திருமண விழா பாரம்பரிய முறையில் நடைபெற்றது.
தம்பதிகளுக்கு மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட ஒன்பது மாட்டு வண்டிகளில் தமிழ்ப் புத்தகங்களை வைத்து சீர்வரிசையாக வழங்கப்பட்டது.
திருவள்ளுவர், ஔவையார், இளங்கோவடிகள், கம்பர், பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி ஆகிய கவிஞர்கள் எழுதிய கவி நூல்கள் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
மா, பலா, வாழை என முக்கனிகள், மலர்களைத் தட்டில் ஏந்திய படியும் தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான உருமி இசை முழங்க, மேளதாளம் இசைக்க ஆட்டம்பாட்டத்துடன் இந்த ஊர்வலம் நடைபெற்றது.

