ஆம்பூர்: தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வெற்றிக்காகப் பணம், பரிசுப்பொருள்களை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளனர்.
இதேபோல், திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் நகராட்சியில் 36வது வார்டில் சுயேச்சையாகப் போட்டி யிட்ட பெண் வேட்பாளர், தங்கக் காசுகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
ஆனால், அவர் வழங்கிய காசுகள் போலியான பித்தளைக் காசுகள் என்பது உறுதியாகி உள்ளது.
"ஒருவர், இருவர் அல்ல. 1,500 பேரை ஏமாற்றி உள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆம்பூரில் மறுவாக்குப் பதிவு நடத்தவேண்டும்," என்று பெண் வாக்காளர்கள் பலரும் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்தனர்.
ஆம்பூர் நகராட்சியில் திமுக பிரமுகர் துரைப்பாண்டியின் மனைவி மணிமேகலை, சுயேச்சையாக தென்னை மரச் சின்னத்தில் போட்டியிட்டார்.
இதையடுத்து, மணிமேகலையின் கணவர் துரைப்பாண்டி 18ஆம் தேதி நள்ளிரவில் வீடுவீடாக 1,500 வீடுகளுக்கு வந்து தங்கக் காசுகளைக் கொடுத்து தன் மனைவிக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
வாக்குகளைப் போட்ட பிறகு தங்கக் காசுகளை நகைக்கடையில் சோதனை செய்த சிலர், அவை போலியானவை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், சுயேச்சை வேட்பாளரும் அவரது கணவரும் தங்களது கைபேசியை அணைத்துவிட்டு தலைமறைவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

