அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் என முதல்வர் டுவிட்
சென்னை: ஆண்டுதோறும் பிப்ரவரி 21ஆம் தேதி உலகத் தாய்மொழி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி, அனைத்து மொழிகளையும் சமமாக நடத்தும் இந்தியாவைக் காண நாம் உறுதியேற்போம்," என்று குறிப்பிட்டுள்ளார். சாதி, மதத்தைக் கடந்து அனைவரும் ஒன்றிணையும் ஒரே விஷயம் தாய்மொழி மட்டுமே. தங்களது மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகிகளுக்கு எனது வணக்கங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
எட்டு மாணவர்கள் தத்தெடுப்பு
நீலகிரி: நீலகிரி மாவட்டம், கரிக்கியூர் கிராமத்தில் உள்ள பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து வரும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள், மூன்று மாணவிகள் என எட்டு பேரைத் தத்தெடுத்து, அவர்களது கல்விச் செலவை இந்திய மக்கள் கூட்டமைப்பினர் ஏற்றுக்கொண்டனர். மாணவர்களுக்கு மாலை அணிவித்து, முதற்கட்டமாக அவர்களுக்கான சீருடைகள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். மாணவர்கள் பாரம்பரிய இசைக் கருவிகளுடன் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மக்களைக் கவர்ந்த ஆமை சிற்பம்
வெள்ளி கடற்கரையில் ஆமை மணல் சிற்பம். படம்: ஊடகம்
கடலூர்: அழியும் நிலையில் உள்ள ஆலிவ் ரிட்லி வகை ஆமைகளைப் பாதுகாக்கும் வகையில் கடலூரைச் சேர்ந்த வனவிலங்கு ஆர்வலர் செல்லா என்பவர் வனத்துறை சார்பில் கடலூர் வெள்ளி கடற்கரையில் ஆமை மணல் சிற்பத்தை வடிவமைத்திருந்தார். இதனை கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் ரசித்துச் செல்கின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் மே வரை முட்டை இடுவதற்காக கடற்கரையை நோக்கி வரும் இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகள் ஒவ்வொன்றும் நூற்றுக்கணக்கான முட்டைகளை இடுவது வழக்கம்.
இந்த முட்டைகளைச் சேகரித்து கடலூர் கடற்கரையிலேயே பொரிப்பகம் அமைத்து, ஆமைக் குஞ்சுகளைக் கடலில் விடுவதே தங்கள் பணியாக தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர்.
அதிமுக-திமுக மீது வழக்குப்பதிவு
சென்னை: சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலன்று ஏற்பட்ட மோதல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது எட்டுப் பிரிவுகளின் கீழ் தண்டையார் பேட்டை காவல்துறையில் வழக்குப் பதிவாகி உள்ளது. ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் ஒருவரைத் தாக்கும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த நரேன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவாகி உள்ளது.
இதேபோல், தன்னைத் தாக்கியதாக ஜெயக்குமாரின் கார் ஓட்டுநர் ஜெகன்நாதன் அளித்த புகாரின் அடிப்படையில் திமுகவைச் சேர்ந்த 10 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
'சிறையில் இருந்தவர் மாயம்'
வேலூர்: வேலூர் மத்திய சிறையின் வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறைவாசியைக் காணவில்லை என புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த முத்துக்குமாரை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

