சென்னை: திமுக தொண்டரைத் தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. அப்போது சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் கள்ள வாக்குகள் போடப்படுவதாக ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் அங்கு விரைந்து சென்றபோது, திமுக தொண்டர் நரேஷ் குமார் என்பவரைப் பிடித்து வைத்து அதிமுகவினர் விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர்.
ஜெயக்குமார் சென்றதும் நரேஷ் குமாரின் சட்டையைக் கழற்றி அவரது கைகளைக் கட்டி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட நரேஷ் குமார் காவல்துறையில் தாம் தாக்கப்பட்டது குறித்து புகார் அளித்தார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 15 சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் சுமார் 8 மணியளவில் ஜெயக்குமாரின் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர், அவரைக் கைது செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த அதிமுகவினர் பலர், அவர் விசாரிக்கப்பட்ட நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தின் முன் கூடி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதற்கிடையே, சென்னை நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணன் முன்பு முன்னிலைப்படுத்தப்பட்ட ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டார்.

