நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இப்படியொரு தோல்வி உண்டாகும் என அதிமுக தலைமை எதிர்பார்க்கவில்லை என்றும் இந்தத் தோல்வி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி கண்டுள்ளது. குறிப்பாக, அதன் கோட்டையாகக் கருதப்பட்ட கொங்கு மண்டலத்தையும் திமுக வசம் இழந்துள்ளது.
இம்முறை கோவை, சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளிலும் திமுக கூட்டணியே பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி உள்ளது. இதனால் அதிமுக தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
கொங்கு மண்டலம் என்பது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். கடந்த பல தேர்தல்களில் இது அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வந்தது.
கடந்த 2011, 2016 தேர்தல்களில் அதிமுக ஆட்சியமைக்க கொங்கு மண்டலம் முக்கிய பங்களிப்பை அளித்தது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ள நிலையில், சேலம், கோவை மாநகராட்சிகளிலும் அடைந்துள்ள தோல்வி அதிமுகவினரை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த போதிலும், கொங்கு மண்டலத்தில் திமுகவால் முத்திரை பதிக்க முடியவில்லை என்ற வருத்தம் தமக்கு இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாகவே கூறி இருந்தார்.
அதன் பின்னர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் சிலர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து கட்சிப் பணியாற்ற வைத்தார் முதல்வர் ஸ்டாலின். அதன் பலனாகவே இம்முறை அந்த மண்டலத்தையும் திமுக தன் வசமாக்கி உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம் அமைந்துள்ள சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 23ஆவது வார்டிலும்கூட திமுக தன் வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது.
பழனிசாமியின் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி நகராட்சி, அரசிராமணி, பூலாம்பட்டி பேரூராட்சிகள் உள்ளன. இதில் 15 வார்டுகள் கொண்ட அரசிராமணி பேரூராட்சியில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி பேரூராட்சியிலும் அதிக இடங்களில் திமுக வெற்றி கண்டது.
மாநகராட்சி பகுதியில் சேலம் தெற்கு தொகுதியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவும் சேலம் மேற்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமகவும் வெற்றி பெற்று இருந்தன.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இந்தப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான வார்டுகளையும் திமுக தன்வசமாக்கி உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்த போதிலும், கொங்கு மண்டலத்தில் அக்கட்சியால் பெரிதாக ஏதும் சாதிக்க முடியவில்லை. கோவையில் உள்ள பத்து தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிமுக கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இம்முறை கொங்கு மண்டலத்திலும் திமுக ஊடுருவி முத்திரை பதித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக சாதிக்க வேண்டும் என்றும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்பட்டது திமுக. அதன் பலனாக இம்முறை அக்கட்சிக்கு கொங்கு மண்டலத்திலும் பெரிய வெற்றி கிடைத்துள்ளது.

