சென்னை: காங்கிரஸ் கட்சியைவிட பாஜக பெரிய கட்சி என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத வாதம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி (படம்) தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பத்து மாவட்டங்களில் வெற்றிக்கணக்கையே தொடங்காத பாஜகவுடன் காங்கிரஸ் கட்சியை ஒப்பிட்டுப்பேசுவற்கு யாருக்கும் தகுதி கிடையாது என்று ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, பெற்ற இடங்களைவிட தற்போது 0.7 விழுக்காடு இடங்களை மட்டுமே அதிகமாக பெற்றுள்ளது பாஜக. இதை வைத்து மூன்றாவது பெரிய கட்சி என்று கூறிக்கொள்ள அக்கட்சிக்கு எந்தவித தகுதியும் கிடையாது.
"மேலும், சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக 16 இடங்களில் போட்டியிட்டு 13 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைவிட பெரிய கட்சி என்று சொல்வதை ஏற்க இயலாது," என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு தனித்துப் போட்டியிட்டபோது 2.07 விழுக்காடு இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, தற்போது 2022 மாநகராட்சித் தேர்தலில் 59.34% இடங்களையும் நகராட்சித் தேர்தலில் 4.4% இடங்களில் இருந்து, தற்போது 38.32% இடங்களையும் கூடுதலாகப் பெற்று மகத்தான வெற்றியை ஈட்டியிருக்கிறது என்று அழகிரி சுட்டிக்காட்டி உள்ளார். எனவே, காங்கிரஸ் கட்சியோடு பாஜகவை ஒப்பிடுவதை இனியாவது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

