சென்னை: தமிழக சுகாதாரத் துறை செயல்படுத்தி வரும் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தின் மூலம் பயன்பெறும் 50ஆவது லட்சம் பயனாளியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு தேடிச்சென்று நலம் விசாரித்தார்.
அப்போது அப்பயனாளிக்கு அவர் மருந்துப் பெட்டகம் ஒன்றை வழங்கினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
பயனாளிகளின் இல்லங்களுக்குத் தேவையான முக்கியமான மருந்துகளையும் மருத்துவச் சேவைகளையும் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதன் மூலம் 45 வயதைக் கடந்த உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகள் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள். சிறுநீரக நோயாளிகளுக்கு சுய 'டயாலிஸ்' (ரத்த சுத்திகரிப்பு) செய்துகொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ சேவைகளும் லட்சக்கணக்கானோருக்குப் பயனளித்து வருகிறது.
இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ள ஐம்பதாவது லட்சம் பயனாளியை செங்கல்பட்டு மாவட்டத்தில் நேரில் சந்தித்து மருந்துப் பெட்டகத்தை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

