செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
fad1472b-f66b-4487-98ac-57e2466c3d41
-

ஜெயக்குமார் பிணை மனு தள்ளுபடி

சென்னை: திமுக உறுப்பினரைத் தாக்கிய வழக்கில் கைதாகி உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பிணை மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவாகி உள்ளது. இரண்டாவது வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவரை மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

சென்னை: நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் திமுகவை சேர்ந்த தனசேகரன். சென்னை மாநகராட்சி 137வது வார்டில் போட்டியிட்ட அவர் 10,578 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு திமுக நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஓரளவு முன்னேற்றம் கண்ட பாஜக

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கான ஆதரவு ஓரளவு அதிகரித்துள்ளதாக அரசியல் பார்வை யாளர்கள் கருதுகின்றனர். மாநகராட்சிகளில் 22, நகராட்சிகளில் 56, பேரூராட்சிகளில் 230 வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மாநகராட்சிகளில் சுமார் 1.60% வாக்குகளுடன் ஐந்தாவது இடத்தையும் நகராட்சிகளில் 1.50% வாக்குகளுடன் நான்காம் இடத்தையும் பேரூராட்சிகளில் 3% வாக்குகளுடன் நான்காம் இடத்தையும் அக்கட்சி பிடித்துள்ளது.

வேட்பாளரின் ஒற்றைப்படை நம்பிக்கை

காரைக்குடி: காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட 11வது வார்டில் 57 வயதான மெய்யர் நான்காவது முறையாக சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இவர் எண் கணித ஜோதிடத்தில் குறிப்பிடுவதுபோல் தனக்கு ஒற்றைப்படைதான் அதிர்ஷ்டம் என்று நம்புகிறார். இதனால் தேர்தலில் தன்னை எதிர்க்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கை ஒற்றைப் படையில் இல்லை என்றால், உடனே தன் மனைவியை வேட்புமனுத் தாக்கல் செய்யுமாறு கூறிவிடுவார். இவ்வாறு செய்ததால்தான் தமக்கு வெற்றி கிடைத்ததாக கூறுகிறார் மெய்யர். இவ்வாறு தன் கணவரின் வெற்றிக்காக நான்கு முறை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் மெய்யரின் மனைவி சாந்தி.