'உள்ளாட்சிப் பிரதிநிதிகளை நான் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருப்பேன்'
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுகவினர் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், புதிதாகத் தேர்வாகி உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் மீது எந்தப் புகாரும் வராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.
இந்நிலையில் தேர்தலில் வெற்றிபெற்ற அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வெற்றியை திமுகவினர் ஆடம்பரமாக அல்லாமல் அமைதியாகக் கொண்டாட வேண்டும் என்பதே தமது பனிவான, உரிமை கலந்த வேண்டுகோள் என்றார்.
"மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். மக்களுக்கு நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும், உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும்.
"மக்கள் முன்வைக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்துக்கும் உடனடியாக தீர்வு காண வேண்டும்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திமுக பிரதிநிதிகளின் செயல்பாடுகளைத் தாம் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்கப் போவதாகக் குறிப்பிட்ட அவர், சரியாகச் செயல்படாத யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க தயங்கப் போவதில்லை என்று எச்சரிக்கையும் விடுத்தார்.
வாழ்த்து கூறிய வைகோ
இதற்கிடையே, தமிழ், தமிழர், தமிழகத்தின் நலனுக்காகப் பாடுபடும் மு.கஸ்டாலின் மேற்கொண்டு வரும் அரசியல் பயணத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மேலும் ஊக்கமாக அமையும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தமிழகத்திற்கான உரிமைகளைப் பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலம் மக்கள் பேராதரவு அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ஆட்சிப் பொறுப்பேற்ற 8 மாத காலத்திற்குள் தேர்தல் வாக்குறுதிகளில் 80 விழுக்காட்டை நிறைவேற்றிக்காட்டி திமுக அரசு சாதனை படைத்து இருக்கிறது. தமிழகத்திற்கான உரிமைகளைப் பாதுகாக்கவும் மாநில சுயாட்சிக் கோட்பாடு நிலைபெறவும் முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முயற்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலம் தமிழக மக்கள் அளித்துள்ள பேராதரவு பறைசாற்றப்பட்டு இருக்கிறது," என்று வைகோ தெரிவித்துள்ளார்.

