சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றி ஊக்கத்தை அடிப்படையாக வைத்து 2024ல் நடக்கும் தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் அதே அணுகுமுறையைக் கடைப்பிடித்து சாதனை படைக்க வேண்டும் என்று தமிழக பாஜகவுக்கு மேலிடம் கட்டளை இட்டு இருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எப்படியாவது குறைந்தபட்சம் ஆறு இடங்களையாவது வென்றுவிட வேண்டும்.
அதைத் தொடர்ந்து 2026ல் நடக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்று தமிழக ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று மாநில பாஜகவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக அத்தகவல்கள் கூறுகின்றன.
நடந்து முடிந்த நகர உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக, 242 பேரூராட்சி வார்டுகள், 56 நகராட்சி வார்டுகள், 22 மாநகராட்சி வார்டுகள் உள்ளிட்ட பல வார்டுகளையும் கைப்பற்றி மாநிலத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு அது முதல் வெற்றியை சாதித்து இருக்கிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு மாநில பாஜக இந்தத் தேர்தலின்மூலம் புது தெம்பைப் பெற்று சொந்தக் காலில் எழுந்து நிற்க முயற்சி செய்வதாகவும் வரும் தேர்தல்களை அது புதிய வலுவுடன் அணுக இந்த வெற்றி ஊக்கம் தந்து உதவும் என்றும் கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
மேலிட கட்டளையை அடுத்து மாநில பாஜக, நகர்ப்புறங்களில் திறம்பட செயல்பட்டு தன்னுடைய பலத்தை வலுவாக்கிக்கொள்ளும் வகையில் இப்போதே வியூகங்களை வகுக்கத் தொடங்கவிட்டதாக அரசியல் பேச்சு அடிபடுகிறது.
இதற்கு ஆதரவாக உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாஜக மேலிடம் தமிழ்நாட்டின்மீது ஒருமித்த கண் வைக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளையில், ஆளும் கட்சியான திமுகவும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான களப்பணி வியூகங் களைப் படுசுறுசுறுப்பாக திட்டமிட்டு வருவதாகவும் அரசியல் கவனிப் பாளர்கள் கூறுகிறார்கள். மொத்தத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல், தமிழ்நாட்டின் வருங்கால அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதே அவர்களின் கணிப்பாக இருக்கிறது.
அசைக்க முடியாத இமாலய சக்தியாக இருந்து வந்த அதிமுக, இனி தன்னுடைய வியூகத்தையும் அணுகுமுறையையும் இலக்குகளையும் மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் தெரிகிறது.
அதேவேளையில், பாமக, தேமுதிக போன்ற அரசியலில் குறிப்பிட்ட வாக்குகளைத் தக்கவைத்துக் கொண்டு இருந்த கட்சிகள், இது வரை தாங்கள் கொண்டிருந்த அளவுக்கு இனி முக்கியத்துவத்துவம் பெற்றிருக்காது என்றும் அவர்கள் கணிக்கிறார்கள்.
உசுப்பிவிட்ட உள்ளாட்சித் தேர்தல்; திமுகவும் அதிரடியாக தயாராகிறது என தகவல்

