தக்காளி அமோக விளைச்சல்:
கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
தக்காளி விளைச்சல் அதிகரிப்பால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி விலை கிலோ ரூ.5 முதல் ரூ.7 வரை விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு விளைவிக்கப்படும் தக்காளி, ராயக்கோட்டை தக்காளிச் சந்தை, ஓசூர், கிருஷ்ணகிரி சந்தைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனையாகிறது.
போதை: வாகனத்தை பள்ளத்தில் கவிழ்த்தார்; 15 பேர் காயம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ஆலை தொழிலாளர்களை வேனில் ஏற்றிக்கொண்டு சென்றவர் வாகனத்தை 10 அடி பள்ளத்தில் இறக்கிவிட்டார். அதனால் வாகனத்தில் இருந்தவர்களில் 15 பேர் காயம் அடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக பாதிக்கப்பட்ட தொழிலாளி கூறினார் என்று காவல்துறை தெரிவித்தது.
குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் ஓட்டுநரை அதிகாரிகள் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி ரயில் நிலையத்தில்
6 கிலோ தங்க நகை பறிமுதல்
திருச்சி: திருச்சி ரயில் சந்திப்பு நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ரயில்களில் வரும் பயணிகளிடம் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் சோதனை செய்த போது, காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் சென்ற விரைவு ரயிலில் மூன்று பயணிகளை மடக்கினர்.
கோல்கத்தாவைச் சேர்ந்த இருவர், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து வளையல், நெக்லஸ், ஆரம், உள்ளிட்ட 6 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.3 கோடி என்று தெரிவித்த அதிகாரிகள், விசாரணை நடப்பதாகவும் கூறினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 74வது பிறந்த நாள் கொண்டாட்டம்
சென்னை: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக தலைவர்கள் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மாநிலம் முழுவதும் இலவச உணவு உள்ளிட்ட பல நற்பணிகளில் கட்சித் தொண்டர்கள் ஈடுபட்டனர்.
2,000 லிட்டர் சாராய ஊறல் ஒழிப்பு
வேட்டவலம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் மலைப்பகுதியில், 2,000 லிட்டர் சாராய ஊறல்களைக் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சாராயத்தை அழித்த காவல்துறை, பலரையும் தீவிரமாகத் தேடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சிறையில் உண்ணாவிரதம்
திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, பங்ளாதேஷ், ரஷ்யா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 160 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசு தங்களை விடுவித்து தங்கள் மீதான வழக்குகளை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை தமிழர்கள் 10 பேர் நேற்றுக் காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளதாக நேற்றுத் தெரிவிக்கப்பட்டது.

