நாகப்பட்டினம்: மன்னார் வளைகுடா, பாக் நீரிணை ஆகியவற்றில் உயிரியல் வளங்களைக் காப்பாற்றுவதற்காக காட்டுவளத் துறையின்கீழ் கடல்வாழ் உயிரின சிறப்புப் படை ஒன்றை அமைக்க தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது.
நாகப்பட்டினம் பகுதியில் ஒவ்வோர் ஆண்டும் கடல்வாழ் உயிரினங்கள் பலவும் மாண்டு போகின்றன. சென்ற மாதத்தில் மட்டும் வேதாரண்யம் அருகே உள்ள கடற்கரைப் பகுதிகளில் 150 அரிய வகை ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின.
இதர அரியவகை கடல்வாழ் உயிரினங்களும் அப்பகுதியில் மாண்டுவிடுகின்றன.
இந்நிலையில், கடல்வாழ் உயிரினங்களைக் காப்பாற்றி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் புதிய அமைப்பு உருவாக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

