ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 22 தமிழக மீனவர்களைக் கைதுசெய்துவிட்டது.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த அந்த மீனவர்கள், தமிழ்நாடு நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களில் ஒன்பது பேர் நள்ளிரவில் கைதானதாக தகவல்கள் தெரிவித்தன.
விசைப்படகு ஒன்றையும் இலங்கை கடற்படை கைப்பற்றியதாக முதல்கட்ட தகவல்கள் கூறின. இந்நிலையில், கச்சத்தீவு அருகே இதர படகுகளில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த மேலும் 13 தமிழக மீனவர்களை நேற்றுக் காலை இலங்கை கடற்படை கைது செய்ததாகவும் அவர்களின் படகுகளை பறிமுதல் செய்ததாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
அந்த 22 பேரையும் மார்ச் 10 ஆம் தேதிவரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
தன்னுடைய எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள் என்று கூறி அவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்கதையாக நிகழ்ந்து வருகின்றன.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகண்டு உதவும்படி இந்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.