திருச்சி: திருச்சியைச் சேர்ந்த திமுக அமைச்சர் கே என் நேருவின் தம்பியான தொழில்துறை பெரும்புள்ளி ராமஜெயம், 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அதிகாலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
அவரின் உடல், திருச்சி கல்லணை ரோட்டில் பொன்னிடெல்டா பகுதி காவிரி ஆற்றுக் கரையோரம் தூக்கி வீசப்பட்டு கிடந்தது. கொலை நடந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில் ராமஜெயம் கொலை பற்றிய புலன்விசாரணை புது கோணத் தில் முழுவீச்சில் தொடங்கும் என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவம் குறித்து முதலில் ஸ்ரீரங்கம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து 12 தனிப்படைகள் அமைத்து விசாரணை தொடங்கியது.
எந்த முன்னேற்றமும் இல்லாததை அடுத்து வழக்கு நான்கு மாதங்கள் கழித்து சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆன போதிலும் சிபிசிஐடி விசாரணையில் ஒன்றும் வெளிவரவில்லை. இந்நிலையில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று ராமஜெயத்தின் மனைவி லதா வழக்கு தாக்கல் செய்தார்.
ஆனால் பல தடங்கல்களுக்குப் பிறகு கடைசியாக 2017ஆம் ஆண்டு நவம்பரில் வழக்கு சிபிஐ வசமானது. சிபிஐ விசாரித்து வந்தது. அதற்குள் நான்கு ஆண்டுகள் ஓடியதுதான் மிச்சம். அதையடுத்து வழக்கு விசாரணையை மறுபடியும் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதற்குத் தமிழக காவல் துறை தயார் என்று அறிவிக்க, கொலை விசாரணை மறுபடியும் தமிழக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ராமஜெயம் கொலை விசாரணை பற்றி கருத்து தெரிவித்த தமிழக காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர், அடுத்த ஓரிரு நாள்களில் டிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என்றும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கைகளை ஆய்வு செய்து புதிய கோணத்தில் விசாரணை முழுமூச்சில் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

