சென்னை: காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மனமாச்சரியங்களைக் கடந்து மறைந்த தலைவரின் பிறந்தநாளை கொண்டாடி, மரியாதை செலுத்தியதற்காக தமிழக அரசைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.
இந்த அரசியல் நாகரிகம் தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெ.ஜெயலலிதா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழே அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்துக்கு அரசு சார்பில் செய்தித்துறை செயலாளர், இயக்குநர் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி காலமானார். 2018ம் ஆண்டு அவர் மறைந்தபோது தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. எனினும் அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவது குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
ஆனால் ஜெயலலிதாவின் பிறந்தநாளை நடப்பு திமுக அரசு கொண்டாடி உள்ளது. அவருக்கு மரியாதையும் செலுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு சமூக வலைத் தளங்களில் அரசுக்குப் பாராட்டு தெரிவித்து ஏராளமானோர் பதிவிட்டுள்ளனர்.

