எடப்பாடி பழனிசாமி பதவி விலக வலியுறுத்தி சென்னையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்
சென்னை: அதிமுகவில் மீண்டும் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அக்கட்சி வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.
'அதிமுகவுக்கு தொடர் தோல்விகளை மட்டுமே பெற்றுத் தந்துள்ள எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' எனும் வாசகம் அந்தச் சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளது.
இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் வேலை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு குற்றம்சாட்டுவதாகவும் தமக்கு இதில் எந்தவிதத் தொடர்பும் இல்லை என பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் இரட்டைத் தலைமை என்ற ஏற்பாட்டுக்குப் பின்னர் பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பினர் இடையே அவ்வப்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் மோதல்கள் வெடித்து வருகின்றன. இரு தரப்பினரும் தனித்தனியாகவே செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு கட்சித்தேர்தல் நடத்தப்பட்டு இருவரும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்குப் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனால் உட்கட்சிப்பூசல் முடிவுக்கு வந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக இரு தலைவர்களும் தனித்தனியாக பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அதிமுக கணிசமான இடங்களைக் கைப்பற்றி மீண்டும் வலுவான எதிர்க்கட்சியாக நிமிர்ந்து நிற்கும் என நிர்வாகிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் ஒரு மாநகராட்சியைக் கூட கைப்பற்ற முடியாமல் கட்சி படுதோல்வி அடைந்திருப்பது அதிமுக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதுவே மீண்டும் உட்கட்சிப் பூசலுக்கு வித்திட்டுள்ளது. இரட்டைத் தலைமை வேண்டாம் என்று நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் மீண்டும் வெளிப்படையாகப் பேசத் தொடங்கி உள்ளனர். கட்சித் தலைமையை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பழனிசாமி விரும்புவதாகவும் பன்னீர்செல்வம் தரப்பு இதற்கு உடன்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
"திமுக உறுப்பினர் தாக்கப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி மட்டும் சென்றார். இதுகுறித்து பன்னீர்செல்வத்துக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் பன்னீர்செல்வம் தரப்பு கோபமடைந்துள்ளது," என்று விவரமறிந்த நிர்வாகிகள் சிலர் கூறுகின்றனர்.
இந்தக் கோபத்தின் வெளிப்பாடாகவே, சென்னை முழுவதும் பழனிசாமி பதவி விலக வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தேர்தல் தோல்விக்கு பழனிசாமி தரப்பும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பழனிசாமி முயற்சி செய்வதை ஏற்க இயலாது என்றும் பன்னீர்செல்வம் தரப்பு திட்டவட்டமாகக் கூறியதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கட்சி வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

