சென்னை: கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துள்ள சட்டவிரோத கடற்கரை தாது மணல் ஏற்றுமதி குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இத்தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது.
கடற்கரை தாதுமணல் ஏற்றுமதியில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தாது மணல் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களால் ரூ.5,832 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து இந்தத் தொகையை வசூலிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களின் ஆட்சியர்கள் இந்த உத்தரவைச் செயல்படுத்த உள்ளனர். சட்ட விரோத மணல் ஏற்றுமதியில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் புகார் அளிக்குமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்படும் என்று தொழில்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடற்கரை தாது மணல் எடுக்கும் உரிமங்களை மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு வழங்கியதாகவும் பெரிய அளவிலான சட்டவிரோத மணல் கொள்ளை பற்றிய புகார்களைத் தொடர்ந்து, கடந்த 2013ம் ஆண்டு தாது மணல் எடுக்கவும் கொண்டு செல்லவும் தடைவிதிக்கப்பட்டதாக வும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து கடற்கரை மணல் கொள்ளை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது என்றும் அதன் மூலம் மூன்று மாவட்டங்களில் 234.55 ஹெக்டேர் பரப்பளவில் 1.01 கோடி டன் மணல் சட்ட விரோதமாக அள்ளப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
மணல் அள்ள தடை விதிப்பதற்கு முந்தைய காலத்தில் (2000 முதல் 2013 வரை) தனியார் நிறுவனங்களால் தமிழக அரசுக்கு ரூ.3,829.76 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தடைக்குப் பிந்திய காலத்தில் (2013 முதல் 2016 வரை) ரூ.2,002.67 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

