சென்னை: தமிழக மாணவர்கள் சிலர் உக்ரேன் நாட்டில் இருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்ற தவிப்புடன் அந்நாட்டின் எல்லையில் காத்துக் கிடக்கின்றனர்.
குமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உக்ரேன் எல்லையில் இருந்தபடி, பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் காணொளிப்பதிவுகளை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வருகின்றனர்.
குமரியைச் சேர்ந்த 21 மாணவர்கள் எல்லையில் இருந்து அனுப்பிய காணொளிப்பதிவுகள் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டுள்ளன.
பல மாணவர்கள் இரு தினங்களுக்கு முன்பே ரயில் மூலம் ருமேனியா சென்றடைந்துள்ளனர் என்றும் பலர் உக்ரேன் எல்லை மூடப்பட்டிருப்பதால் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே சிக்கித் தவிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான மாணவர்கள் போர் நடப்பதால் அச்சத்துடன் இருப்பதாகவும் உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, உக்ரேனில் உள்ள தமிழக மாணவர்களிடம் அங்குள்ள நிலைமை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்.
அப்போது அனைவரும் தைரியமாக, பாதுகாப்பாக இருக்கவேண்டும் என அவர் கூறினார்.
மாணவர்களிடம் காணொளி வசதி மூலம் அவர் சிறிது நேரம் உரையாடியபோது, அங்கு உணவு உள்ளிட்டவை கிடைக்கிறதா எனவும் கேட்டறிந்தார்.
அனைவரையும் மீட்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.