செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
e2066ecd-9b01-4310-a55a-3e6fd00f1a77
-

அரசியல் வேண்டாம், நற்பணி போதும்: மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் முடிவு

பெரம்பலூர்: இனி நேரடி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் மக்களுக்கு உதவும் வகையில் நற்பணிகளில் மட்டுமே ஈடுபடுவது என்றும் பெரம்பலூர் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். இது தொடர்பாக அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட ஒன்பது நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவதாக தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர். தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருவதால் கவலை அடைந்துள்ளதாகவும் அதன் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். "கட்சியில் எந்தவித வளர்ச்சியும் இல்லை. உறுப்பினர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தலைவர் மீது எங்களுக்கு வெறுப்பு இல்லை. எனினும் கட்சியை விட்டு வெளியேறுகிறோம்," என்று அந்நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வரைச் சந்தித்த ப.சிதம்பரம்: மாநிலங்களவை எம்.பி. ஆக விருப்பம்

சென்னை: மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தம்மை தேர்ந்தெடுக்க உதவ வேண்டும் என திமுகவிடம் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று ப.சிதம்பரம் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்காக அவர் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ப.சிதம்பரத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் முடிவடைகிறது. அச்சமயம் தமிழகத்தில் இருந்து ஆறு பேர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அச்சமயம் தமக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் என ப.சிதம்பரம் முதல்வரிடம் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.

கமுதி: 1,100 கிலோ 'குட்கா' பறிமுதல்

ராமநாதபுரம்: கமுதியில் 1,100 கிலோ 'குட்கா' எனப்படும் போதைப்பாக்கு வகைகளைப் பதுக்கி வைத்திருந்தவர் கைதானார். நேற்று முன்தினம் அவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது 25 மூட்டைகளில் அவர் போதைப்பாக்குகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.7.6 லட்சம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.