சென்னை: உக்ரேனில் எந்நேரமும் குண்டுகள் வெடிக்கும் சத்தத்தைக் கேட்க முடிவதாகவும் பாதாள அறைக்குள் பதுங்கி இருப்பதாகவும் அங்குள்ள தமிழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஒருவேளை உணவு மட்டுமே கிடைப்பதாகவும் குடிநீர் இன்றி சிரமப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் பலர் தங்கள் பெற்றோருடன் பேசும் காணொளிப் பதிவுகள் பல சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
அதில் உக்ரேன் எல்லைப் பகுதிக்கு தங்களை அழைத்துச் செல்ல அங்குள்ள இந்திய தூதரகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ரஷ்ய ராணுவம் இடைவிடாமல் நடத்தும் தாக்குதல் காரணமாக இந்த முயற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அம்மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
"பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. எனவே போக்குவரத்து வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என உக்ரேன் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
"குண்டுகள் வெடிக்கும்போது அபாய ஒலி எழுப்பப்படும். அதைக் கேட்டதும் நாங்கள் அருகில் உள்ள பாதாள அறைக்குள் சென்று பதுங்கிக் கொள்வோம்," என தமிழக மாணவர்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, உக்ரேனில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி நாகை ஒன்றியத்தில் உள்ள ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளி மாணவர் பிரவீன் தொடர்ந்து சிரசாசனம் மேற்கொண்டார்.
ஆறாம் வகுப்பு படித்து வரும் பிரவீன், போர் வேண்டாம் என்று எழுதி வைத்து, அதன் அருகில் தொடர்ச்சியாக சிரசாசனம் செய்தும் தலைகீழாக நடந்தும் மாணவர்களிடையே போர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அப்போது, பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும், போர் வேண்டாம். அமைதி வேண்டும் என்று முழக்கமிட்டு அவரை உற்சாகப்படுத்தினர்.

