150 அதிமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகளை இழுக்கும் திமுக

150 அதிமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகளை இழுக்கும் திமுக

3 mins read
18fde404-4707-4ee0-8ba7-dabc5796059e
-

மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் சிக்கலின்றி வெற்றிபெறத் திட்டம்

சென்னை: நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் வெற்றி பெற்­றுள்ள அதி­முக உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­களை தங்­கள் பக்­கம் இழுக்க திமுக தலைமை முயற்சி செய்­வ­தாக தமி­ழக ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இத­னால் அதி­முக வட்­டா­ரங்­களில் பர­ப­ரப்பு நிலவி வரு­கிறது.

இதற்­கி­டையே வெற்­றி­பெற்ற அதி­முக உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­களை அக்­கட்­சித் தலைமை இன்­னும் நேரில் அழைத்து வாழ்த்து தெரி­விக்­க­வில்லை என்­ப­தும் அக்­கட்­சி­யி­னர் மத்­தி­யில் விவா­தப் பொரு­ளாகி உள்­ளது.

அதி­மு­க­வில் இருந்து குறைந்­த­பட்­சம் 150 உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­களை தங்­கள் வசம் இழுக்க வேண்­டும் என திமுக தரப்­பில் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­க­வும் அதற்­கான மறை­முக நட­வ­டிக்­கை­களை அக்­கட்­சி­யி­னர் மேற்­கொண்­டுள்­ள­தா­க­வும் இந்து தமிழ் ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­தல் முடி­வு­கள் அறி­விக்­கப்­பட்ட சில நிமி­டங்­க­ளி­லேயே அதி­முக வார்டு உறுப்­பி­னர்­கள் இரு­வ­ர் திமுக பக்­கம் சாய்ந்­த­னர். இது­வரை ஐந்து உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­கள் திமு­க­வுக்கு சென்­று­விட்­ட­னர்.

இதை­ய­டுத்து மேலும் 150க்கும் மேற்­பட்ட அதி­முக உள்­ளாட்சி உறுப்­பி­னர்­களை இழுக்க திமுக பல்­வேறு கட்­டங்­களில் முயற்சி செய்­கிறது என்று வெற்றி பெற்­ற­வர்­கள் கூறு­வ­தாக அந்­த ஊட­கச் செய்­தி­யில் மேலும் குறிப்­பி­டப்­பட்டுள்­ளது.

"குறிப்­பாக, தேனி, தென்­காசி, சேலம், கோவை, சிவ­கங்கை, திரு­வண்­ணா­மலை, செங்­கல்­பட்டு, திரு­நெல்­வேலி உள்­ளிட்­ட ­மா­வட்­டங்­களில் அதி­முக கணி­ச­மாக வெற்றி பெற்­றுள்­ளது.

"இம்­மா­வட்­டங்­க­ளைச் சேர்ந்த நக­ராட்சி, பேரூ­ராட்­சி­க­ளின் வார்­டு­களில் அதி­முக அதிக எண்­ணிக்­கை­யில் வெற்றி பெற்­றுள்­ளது. எனவே இம்­மா­வட்­டங்­க­ளைச் சேர்ந்த அதி­முக உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­க­ளைத்­தான் திமுக குறி­வைத்­துள்­ளது.

"இந்­தச் சம­யத்­தில் கட்­சித் தலைமை வெற்றி பெற்­றுள்ள எங்­களை நேரில் சந்­தித்து நம்­பிக்­கை­யூட்ட வேண்­டும்," என அதி­மு­க­வி­னர் கூறு­வ­தாக இந்து தமிழ் ஊட­கம் மேலும் தெரி­வித்­துள்­ளது.

நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் தமி­ழ­கத்­தில் உள்ள 21 மாந­க­ராட்­சி­க­ளை­யும் திமுக கைப்­பற்றி உள்­ளது. வெற்­றி­பெற்ற ஆயி­ரக்­க­ணக்­கான திமுக உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­களை நேரில் வர­வ­ழைத்து முதல்­வர் மு.க.ஸ்டா­லின் வாழ்த்து தெரி­வித்­தார்.

அதே­போல் பாஜக தலை­மை­யும் வெற்­றி­பெற்ற வார்டு உறுப்­பி­னர்­களை நேரில் வர­வ­ழைத்து வாழ்த்து தெரி­வித்­துள்­ளது. காங்­கி­ரஸ் உள்­ளிட்ட மற்ற கட்­சித் தலை­மை­யும் இவ்­வாறு செய்­யத் தவ­ற­வில்லை.

இந்­நி­லை­யில், அதி­முக தலைமை மட்­டும் அக்­கட்சி சார்­பில் வெற்­றி­பெற்­றுள்ள இரண்­டா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­களை இன்­னும் சந்­திக்­க­வில்லை. இத­னால் அவர்­கள் மன­த­ள­வில் சோர்ந்து, விரக்தி அடைந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத்­த­கைய சூழ­லில் எதிர்­வ­ரும் மேயர், துணை மேயர் உள்­ளிட்ட பத­வி­க­ளுக்­கான மறை­முக தேர்­த­லில் எந்­த­வி­தச் சிக்­க­லும் இன்றி வெற்­றி­பெற வேண்­டும் என திமுக தலைமை விரும்­பு­வ­தா­க­வும் அதன் பொருட்டே அதி­மு­க­வில் இருந்து 150 உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­க­ளை­யா­வது தங்­கள் பக்­கம் இழுக்க வேண்­டும் என திமுக தலைமை முயற்சி செய்­வ­தா­க­வும் ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

இதற்­கி­டையே காங்­கி­ரஸ் எம்பி ராகுல்­காந்தி இன்று சென்­னைக்கு வர இருப்­ப­தா­க­வும் அவர் புதி­தாக தேர்வு செய்­யப்­பட்­டுள்ள அக்­கட்சி உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­களை சந்­திக்க இருப்­ப­தா­க­வும் மாலை­ம­லர் ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

இந்­தச் சந்­திப்­புக்­குப் பின்­னர் மேயர், துணை மேயர் உள்­ளிட்ட உள்­ளாட்­சிப் பத­வி­கள் சிலவற்றை காங்­கி­ர­சுக்கு ஒதுக்க வேண்­டும் என திமுக தலை­மை­யி­டம் தமி­ழக காங்­கி­ரஸ் கோரிக்கை விடுக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் திமுக கூட்­ட­ணி­யில் இடம்­பெற்­றுள்ள விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சிக்கு ஒரு மேயர், ஒன்­பது துணை மேயர் பத­விகளை ஒதுக்க வேண்­டும் என அக்­கட்சித் தலை­வர் திரு­மா­வா­ள­வன் கோரிக்கை விடுத்­துள்­ளார்.