நெல்லை: விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டு களுக்கான இன்ஜின் சோதனை நெல்லையில் உள்ள மகேந்திரகிரி ஆய்வு மையத்தில் சோதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், அம்மையத்தில் 'கிரையோஜெனிக்' இன்ஜினின் நான்காம் கட்ட சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான பணிகளை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக 'கிரையோஜெனிக்' இன்ஜின்களை பரிசோதிக்கும் பணி மகேந்திரகிரி ஆய்வு மையத்தில் நடைபெறுகிறது.
பல்வேறு கட்டங்களாக இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் ஒட்டு மொத்தமாக 2,600 வினாடிகளுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நான்காம் கட்ட பரிசோதனை நூறு வினாடிகளுக்கு வெற்றிகரமாக நீடித்தது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து அடுத்தகட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

