சென்னை: விவசாய நிலத்தில் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, விவசாய நிலங்களில் மதுக்கடை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் அரசு இதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள யாழினி நகரில் டாஸ்மாக் மதுபானக் கடை திறப்பதற்கான நடவடிக்கைகள் அண்மையில் தொடங்கின. இதற்கு அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
யாழினி நகரில் ஏராளமான விளை நிலங்கள் உள்ளன. அங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படும் என பொதும்ககள் தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, விவசாயப் பகுதியில் மதுக்கடை திறப்பதற்குத் தடைவிதிக்க வேண்டும் என அவர் தமது மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
இதையடுத்து அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், குறிப்பிட்ட விவசாய நிலப்பகுதியில் மதுக்கடை திறக்கப்பட மாட்டாது என்றும் சட்ட விதிகளின்படி உரிய இடத்தில் மதுபானக்கடை அமைக்க அனுமதி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, விவசாய பகுதியில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என உத்தரவிட்டது.

