செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c71e8245-eea4-45c3-aa9f-3bc3669e2de9
-

கல் குவாரி அமைக்க கடும் எதிர்ப்பு; மலைமீதேறி பொதுமக்கள் போராட்டம்

தேனி: அரியூர் மலையில் கல் குவாரி அமைக்க அனுமதிக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் அம்மலை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த அப்பகுதி தாசில்தார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். கல் குவாரி அமைப்பது தொடர்பாக மீண்டும் ஆய்வு நடத்தப்படும் என தாசில்தார் உறுதி அளித்தார். முன்னதாக அப்பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் முறையான உரிமம் இன்றி கல் குவாரி அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அரியூர், இருமன்குளம், வடக்குப் புதூர் உள்ளிட்ட கிராம மக்கள் புகார் எழுப்பி இருந்தனர்.

தமிழக மீனவர்கள் எண்மர் சிறைபிடிப்பு

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எட்டு பேரும் சிறைபிடிக்கப்பட்டதாக மற்ற மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தாங்களும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ஏராளமான மீனவர்கள் மீன் பிடிக்காமல் உடனடியாக கரை திரும்பினர். கைதானவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேசுவரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லிப் பயணத்தின்போது இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் ஆலோசனை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.

உலக சாதனைக்காக சிலம்பாட்ட நிகழ்ச்சி: ஆயிரம் பேர் பங்கேற்பு

தூத்துக்குடி: கின்னஸ் சாதனை புரியும் நோக்கத்துடன் தூத்துக்குடியில் நடைபெற்ற சிலம்பாட்ட நிகழ்ச்சியில் ஆயிரம் வீரர்கள் பங்கேற்றதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்தியா, இலங்கை, மலேசியா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஃபிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் பங்கேற்றனர் என்றும் தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் இருந்து இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

11 மாணவர்கள் கின்னஸ் சாதனை

மதுரை: 'ஜம்பிங் ஜாக்ஸ்' என்ற இணைய வழி கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி் மாணவர்கள் 11 பேர் சாதனை படைத்துள்ளனர். 400 பேர் பங்கேற்ற இந்த நிகழ்வில் 170 பேர் மட்டுமே இறுதியில் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் அலங்காநல்லூர் பள்ளி மாணவர்களும் அடங்குவர். ஏற்கெனவே இப்பள்ளியைச் சேர்ந்த ஐம்பது மாணவர்கள் இதே சாதனையை படைத்துள்ளனர் எனப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.