சென்னை: திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளஜெயக்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது பிணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை டி.ஜெயக்குமார் மீது நில அபகரிப்பு வழக்கு ஒன்றையும் பதிவு செய்துஉள்ளனர்.
ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள எட்டு கிரவுண்ட் தொழிற்சாலை நிலத்தை மிரட்டி அபகரித்து விட்டதாக மகேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சாலையை அபகரித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவருக்கு மார்ச் மாதம் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டிக்க ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ேபசினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "கள்ள வாக்கினால்தான், தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. கள்ள வாக்குப் போட முயன்ற ஒருவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததற்கு பரிசாகத்தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சிறைத்தண்டனை கிடைத்துள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் அதிமுகதான் 100 விழுக்காடு வெற்றி பெற்றிருக்கும். பணம், பரிசுப் பொருட்களை கொடுத்து திமுக மாயாஜால வெற்றியைப் பெற்றுள்ளது. திமுக ஜனநாயக முறையில் தேர்தலை சந்திக்க திராணி இல்லாத கட்சி," என்று கூறினார்.
இதற்கிைடயே எடப்பாடி பழனிசாமி பேச ஆரம்பிப்பதற்கு முன்பு மேடையில் முன்னாள் அைமச்சர் செம்மலை திடீரென்று மயங்கி சாய்ந்தார். உடனே அருகில் நின்ற அதிமுக நிர்வாகிகள் அவரைத் தாங்கி பிடித்துக் கொண்டனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
திருவாரூர் ரயில் நிலையம் அருகே திருவாரூர் மாவட்ட அதிமுக கழக செயலாளர் காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின்போது, அதிமுக தொண்டர்கள் மீது பொய் வழக்கு போட்டு இருக்கிறார்கள் என்று கூறி திமுக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சேலம் மட்டுமின்றி திருவாரூர், கன்னியாகுமரி, தேனி, மதுரை, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அதி முகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

