சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் சுயசரிதையான 'உங்களில் ஒருவன்' நூல் நேற்று வெளியீடு கண்டது.
இதற்காக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் பிரம்மாண்ட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மு.க.ஸ்டாலின் தனது பள்ளி-கல்லூரிப் படிப்புக் காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் கூட்டம், முதல் பொதுக்கூட்ட பேச்சு, திரையுலகில் கால் தடம் பதித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலத்தின் தொடக்கம் என 1976ஆம் ஆண்டு வரையிலான 23 ஆண்டுகால வாழ்க்கைப் பயணத்தை 'உங்களில் ஒருவன்' என்ற தலைப்பில் சுயசரிதையாக எழுதிஉள்ளார். இந்தப் புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார்.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகித்தார். திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்று பேசினார். 'உங்களில் ஒருவன்' (பாகம்-1) நூலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி வெளியிட்டார்.
இவ்விழாவில் கேரள முதல்வர் பினராய் விஜயன், ஒமர் அப்துல்லா உட்பட பல மாநில முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நூல் வெளியீட்டு விழாவுக்கு முன்பு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆறு பந்துகளிலும் சிக்ஸர் அடித்ததுபோன்ற வெற்றியை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெற்று உள்ளதாகக் குறிப்பிட்டார்.
"2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி, அதனுடன் இணைந்து நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி, 2020ல் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி, 2021ல் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை உருவாக்கிய வெற்றி, ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி, 2022ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லில் வெற்றி என ஆறு தேர்தல் களங்களில் அடுத்தடுத்து வெற்றி, வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று இருக்கிறது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி.
"கிரிக்கெட் விளையாட்டில் ஒரு ஓவரில் ஆறு பந்துகளிலும் 'சிக்சர்' அடிப்பது போன்ற வெற்றி இது. மக்கள் தந்த வெற்றி. இந்த வெற்றியின் அருமை பெருமை முழுதும் மக்களையே சேரும். அனைவருக்கும் நன்றி, நன்றி," என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திரு ராகுல் காந்தி நூல் வெளியீட்டுக்குப் பிறகு மாலை 6.30 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார்.

