பழநி: பழநி-திண்டுக்கல் மாவட்டத்தில் தாயை அடித்த தந்தையை மகன் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதால் அவர் மரணமடைந்தார்.
பழநி அருகே சத்திரப்பட்டி முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த ஓமந்தூரான், 45, கேரள மாநிலத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக அவர் கேரளாவுக்கு சென்றுவிட்டு வாரத்தில் ஒரு முறை சொந்த ஊருக்குத் திரும்புவார்.
அவரது மனைவி பாண்டீஸ்வரிக்கு திண்டுக்கல்லில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை விற்று பணம் தரும்படி ஓமந்தூரான் தனது மனைவியிடம் தொந்தரவு செய்து வந்தார்.
ஆனால் அதற்கு பாண்டீஸ்வரி சம்மதிக்காததால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ஊர் திரும்பிய ஓமந்தூரான் ஞாயிறு இரவு குடிபோதையில் மனைவியை அடித்து உள்ளார்.
அப்போது 11ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மகனும் 9ஆம் வகுப்பு படிக்கும் மகளும் அவரை தடுத்துள்ளனர். மகளையும் அவர் தாக்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதால் ஓமந்துாரான் இறந்தார். இதையடுத்து மகன் சத்திரப்பட்டி காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். மகனின் பெயரை ஊடகங்கள் வெளியிடவில்லை.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மாணவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை திண்டுக்கல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மதுரையில் உள்ள சிறுவர் சீர்திருந்த பள்ளியில் அடைத்தனர்.

