சேலம்: சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் உலகின் உயரமான முருகன் சிலைக்கு ஏப்ரல் 6ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைெபற்று வருகின்றன.
முருகனை வானில் பறந்துகொண்டே தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் புத்திரகவுண்டன் பாளையத்தில் 146 அடி உயர முருகன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
முத்துமலை அடிவாரத்தில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டிய பாதையில் மிக உயரமான முருகன் சிலையை தமிழகத்தைச் சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி குழுவினர் வடிவமைத்துள்ளனர்.
மலேசியாவின் பத்துமலையில் உள்ள முருகன் சிலையின் உயரம் 140 அடி. அந்த முருகனைவிட ஆறு அடி உயரமாக 146 அடி உயரத்தில் முருகன் உருவச்சிலை மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த முருகனுடன் கூடிய கோவில் கும்பாபிஷேகம் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறுகிறது.
தற்போது சிலையின் திருமேனி கட்டமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் மேல்பூச்சு மற்றும் ஆடை, ஆபரணங்கள் அமைக்கும் நுண்ணிய கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
முருகன் உருவச்சிலைக்கு வண்ணம் தீட்டும் பணிகளும் நிறைவடைந்துள்ளது.
மேலும் முருகன் உருவச்சிலையை பக்தர்கள் முழுமையாக கண்டு ரசிப்பதற்கு வசதியாக 146 அடி உயரத்திற்கும் நவீன 'லிப்ட்' அமைக்கும் பணிகளும் தங்கும் விடுதி வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முத்துமலை முருகன் சிலை மூன்று ஆண்டுகளாக திருப்பணி நடைபெற்று வந்தது.
இந்த உயரமான முருகனை அருகில் தரிசனம் செய்ய ஹெலிகாப்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வானில் பறந்துகொண்டே முருகனை தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

