சென்னை: உக்ரேனில் உள்ள தமிழக மாணவர்களை விரைவாக மீட்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
நேற்று முன்தினம் அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசிவழி தொடர்புகொண்டு பேசிய அவர், உக்ரேனில் உள்ள தமிழ் மாணவர்கள் குறித்த விவரங்களைத் தெரிவித்து, அவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிட வசதி, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும், தமிழக மாணவர்களை மீட்பதற்கு என தனி அலுவலர் ஒருவரை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாணவர்களை மீட்பது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறோம் என்றும் தமிழக மாணவர்கள் அனைவரும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக முதல்வரிடம் உறுதி அளித்துள்ளார்.
இதற்கிடையே, உக்ரேனில் தமிழகத்தின் 21 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,840 மாணவ, மாணவியர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அயலகத் தமிழர் நலன், மறுவாழ்வுத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
போலந்து, ருமேனியா நாடுகளில் இருந்து இயக்கப்பட உள்ள 15 சிறப்பு விமானங்களின் மூலம் அம்மாணவர்கள் அனைவரும் தமிழகத்துக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மத்திய அரசுடன் இணைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
தஞ்சை மாணவர்களின் மனதைக் கரைய வைக்கும் காணொளி
இதற்கிடையே, உக்ரேனில் பதுங்கு குழிகளில் தங்கியுள்ள தமிழக மாணவிகள் நான்கு பேர் தங்கள் பெற்றோருக்கு அனுப்பி உள்ள காணொளிப் பதிவு பார்ப்பவர்கள் மனதைக் கரைய வைப்பதாக உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த ஆஷா, தஞ்சாவூரைச் சேர்ந்த மார்ஷெலின், பிரபாவதி உட்பட ஒன்பது மாணவிகள் உக்ரேனில் கடந்த நான்கு நாள்களுக்கும் மேலாக பதுங்குகுழியில் உள்ளனர்.
அந்தச் சிறிய பதுங்குகுழியில் அதிகமானோர் தங்கியிருப்பதால் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இதனால் அச்சத்துடன் ஒவ்வொரு நிமிடத்தையும் கழிப்பதாகவும் மாணவிகள் கூறியுள்ளனர்.
"அளவில் சிறிய பதுங்குகுகையில் உணவு, தண்ணீர் இல்லை. மெட்ரோ ரயில் நிலையங்களில் தங்கி உள்ளவர்கள் இயற்கை உபாதையை கழிப்பதுகூட சிரமமாக உள்ளது. நாப்கின் இல்லாமலும் சிரமப்படுகிறோம். குண்டுச் சத்தம் கேட்கும்போதெல்லாம் இதயத் துடிப்பே நின்றுவிடும்போல் உள்ளது.
"ஒவ்வொரு முறையும் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கும்போது, அடுத்த முறை உயிருடன் இருப்போமா எனத் தெரியாமல் பயத்துடன் தவித்து வருகிறோம்," என்று மாணவிகள் அக்காணொளிப்பதிவில் கண்ணீர்மல்க குறிப்பிட்டுள்ளனர். உக்ரேனில் இம்மாணவிகள் ஜபோரிஷியா பகுதியில் மருத்துவம் படித்து வருகின்றனர்.
அங்கிருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் உக்ரேன் எல்லைப் பகுதிக்குச் சென்றால்தான் அவர்களால் இந்தியா திரும்ப முடியும். இதற்கு 24 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும் என்றும், இந்திய அரசின் அனுமதியைப் பெற்ற பிறகே பயணம் மேற்கொள்ள முடியும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

