மு.க.ஸ்டாலின்: 'நான் முதல்வன்' திட்டம் வேலை தேடுவோரைத் தகுதிப்படுத்தும்
சென்னை: தமிழகத்தில் வேலை தேடுபவர்களை தகுதிப்படுத்தும் மையங்களை அரசே நிறுவும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இளையர்களுக்கு வழிகாட்டும் வகையில் 'நான் முதல்வன்' திட்டத்தை நேற்று முன்தினம் அவர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய அவர், ஆண்டுதோறும் பத்து லட்சம் (ஒரு மில்லியன்) இளையர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குவதே 'நான் முதல்வன்' திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றார் அவர்.
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியரின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை மேலும் ஊக்குவிப்பதுதான் இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமான 'நான் முதல்வன்' கல்வியில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் இளையர்களை வெற்றியாளராக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றார் முதல்வர் ஸ்டாலின்.
என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்று பள்ளிகள் இனி வழிகாட்டும் என்றும் என்ன வேலைக்கு இளையர்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ளலாம் என்பதை எடுத்துச் சொல்லும் மையங்களாக கல்லூரிகள் மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.
திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இது தமது கனவுத்திட்டம் என்றார்.
"அனைத்து இளைஞர்களையும் கல்வியில், ஆராய்ச்சியில், சிந்தனையில், செயலில், திறமையில் சிறந்தவர்களாக மாற்றிட வேண்டும் எனும் உணர்வோடு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
"தமிழ்நாட்டில் எல்லோரும் பள்ளிக்கல்வியை முடித்துவிடுகிறார்கள். கல்லூரிப் பட்டங்களையும் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்குமே வேலை கிடைத்திருக்கிறதா என்று கேட்டால் அது ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
"போதுமான வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதற்குத் தகுதியான இளையர்கள் இல்லை என்று கூறுகிறார்கள். இதைக் கேட்கும்போது மிக வருத்தமாகத்தான் இருக்கிறது. பட்டம் வாங்கி இருக்கிறார்கள். ஆனால், அந்தப் படிப்பு குறித்த தெளிந்த அறிவு எல்லோருக்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
"எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்று சொல்லி வருகிறேன்.
"இப்படிப் பொருளாதாரம் வளர வேண்டும் என்றால், 2026ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் இரண்டு மில்லியன் இளைஞர்களின் திறன் மேம்பாடு அடைய வேண்டும். இதற்காக மாணவர்களுக்குப் பயிற்சி தரப் போகிறோம். அதற்குமுன், பயிற்சி தரக்கூடிய ஆசிரியர்களுக்கு முதலில் பயிற்சி தரப் போகிறோம்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.