சென்னை: சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது தமிழகத்தில் அதிகரித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை தியாகராய நகர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சிறுவனுக்கு கை, கால் வாய் என உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 4 நாள்கள் சிகிச்சை பெற்ற சிறுவன் வீடு திரும்பினார்.
இந்நிலையில், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடு வழங்க முடியாது என காப்புறுதி நிறுவனம் தெரிவித்துவிட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
18 வயது பூர்த்தி அடையாதவர்கள் வாகனத்தை இயக்கக் கூடாது என விதிகள் உள்ளன.
விதிகளைமீறி சிறுவன் வாகனம் ஓட்டியபோது ஏற்பட்டுள்ள இந்த விபத்தில் இழப்பீடு வழங்க முடியாது என காப்புறுதி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ். கண்ணம்மாள், இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், "இந்த வழக்கில் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டால், சிறுவர்கள் வாகனம் ஓட்டி ஏற்படும் விபத்துகளில் இழப்பீடு கோரும் வழக்குகள் நீதிமன்றத்தில் குவிந்துவிடும்.
"சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதனை ஊக்குவிக்கக் கூடாது.
"மோட்டார் வாகன சட்டத்தின்படி 18 வயதுக்குக் குறைவானவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தடுப்பதற்கான சரியான தருணம் இது.
"ஏற்கெனவே நடந்த விபத்து போல மேலும் ஒரு சம்பவம் நிகழாத வகையில் அச்சட்டத்தை அமல்
படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்," என்றார் நீதிபதி.

