கோவை: போர்க்களமான உக்ரேனிலிருந்து தப்பி தமிழகம் வந்திருக்கும் 22 வயது மாணவி பார்கவி தாம் பட்ட சிரமங்களைச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கிழக்கு உக்ரேனிலுள்ள லிவிவ் பகுதியில் செயல்பட்டு வரும் டேனிலோ ஹாலிட்ஸ்கி லிவிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் 3ஆம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்த இவர், கோவை
கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர்.
பார்கவி கூறுகையில், "உக்ரேனின் லிவிவ் நகரில் தங்கியிருந்தேன். நான் இருந்த இடத்துக்கும், உக்ரேன் தலைநகர் கீவ்வுக்கும் 500 கி.மீ. தொலைவு.
"கீவ் நகரில் இருந்த பதற்றம் நான் இருந்த இடத்தில் இல்லை. இருப்பினும் எப்போது வேண்டுமானாலும் இங்கு தாக்குதல் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்ற காரணத்தில் உடனடியாக சொந்த நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தேன்.
"ஆனால் உடனடியாக புறப்பட முடியவில்லை. நானும் சக மாணவர்களும் கல்லூரி அறையிலேயே ஐந்து நாள் அடைபட்டுக் கிடந் தோம்.
"ஐந்து நாள்களுக்கும் தேவையான உணவையும் வாங்கி வைத்துக்கொண்டோம். அங்கு இருந்த ஒவ்வொருநாளுமே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டும் ஒருவித பதற்றத்துடனும் உறைந்திருந்தோம். பின்னர் கையில் வைத்திருந்த பணத்தை வைத்து, எனது நண்பர்களுடன் லிவிவில் இருந்து பேருந்து மூலம் வெளியேறி எல்லையில் உள்ள ஷாப் ரெயில் நிலையம் சென்றோம்.
"ஆனால் ரயில் டிக்கெட் எடுப்பதற்கு ஒரு நாள் முழுவதும் காத்திருந்தோம். பின்னர் ஒருவழியாக ஹங்கேரி சென்று இந்தியாவின் சிறப்பு விமானத்தில் நாடு திரும்பினோம். எங்களுடன் பயின்ற சில மாணவர்கள் இன்னும் அங்கேயே இருக்கின்றனர். அவர்களையும் மீட்கவேண்டும்," என்றார் அவர்.

