ஹைதராபாத்: தம்மை ஆசிரியர்கள் அடிப்பதாக மூன்றாம் வகுப்பு மாணவன் காவல்துறையில் புகார் அளித்திருப்பது தெலுங்கானாவில் விவாதப் பொருளாகி உள்ளது.
அங்குள்ள மகபூபா நகரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் அனிஸ் என்ற சிறுவன் முகக்கவசம் அணிந்து பையாராம் காவல் நிலையத்துக்கு வந்திருந்தான்.
அங்கிருந்த உதவி ஆய்வாளர் விவரம் கேட்டபோது, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சிறுவன் அனிஸ், பள்ளியில் தன்னுடைய ஆசிரியர்களான சன்னி, வெங்கட் ஆகிய இருவரும் தம்மை அடிப்பதாக புகார் தெரிவித்தான்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் சிறுவனுடன் பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் மாணவர்களைத் துன்புறுத்தக்கூடாது என அறிவுரை வழங்கிய உதவி ஆய்வாளர், மாணவர்கள் ஒழுக்கங்களுடன் நடந்து கொள்ள வேண்டும் என அனிஸுக்கும் அறிவுறுத்தினர்.
சிறுவன் அனிஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் காணொளிப் பதிவு இணையத்தில் வெளியாகியுள்ளது.
சிறுவனின் இந்தத் துணிச்சலான செயல்பாடு தெலுங்கானா மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இந்தக் காணொளிப் பதிவை ஏராளமானோர் பார்த்து ரசித்ததுடன் பரவலாகப் பகிர்ந்தும் வருகின்றனர்.