மதுரை: மதுரை அருகே முனியாண்டி கோவில் விழாவில் 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், வடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பலர் தமிழகம் முழுவதும் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் அசைவ உணவகங்களை நடத்தி வருகின்றனர்.
சிலர் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலும் இதே பெயரில் உணவகங்களைத் திறந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஆண்டுதோறும் வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோவிலில் ஒன்றுகூடி பிரியாணி திருவிழாவை நடத்துகின்றனர். இதில் அப்பகுதி மக்கள் திரளாகப் பங்கேற்பது வழக்கம். இச்சமயம் பத்தாயிரம் பேருக்கு அங்கேயே பிரியாணி சமைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டும் முனியாண்டி விலாஸ் உணவகங்கள் நடத்தி வருவோர், மதுரையில் தங்கள் குடும்பத்தாருடன் திரண்டுள்ளனர்.
திருவிழாவையொட்டி மேளதாளத்துடன் பால் குடம், பூத்தட்டு ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் உணவக உரிமையாளர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 115 ஆடுகள், 523 கோழிகள் பலியிடப்பட்டு, பிரியாணி சமைக்கும் சமையல் கலைஞர்களின் கைப்பக்குவத்தில் 2,000 கிலோ அரிசியைக் கொண்டு பிரியாணி தயாரிக்கப்பட்டு, பின்னர் விடிய விடிய பிரசாதம் வழங்கப்பட்டது.
மதுரையில் முதல் முனியாண்டி விலாஸ் உணவகம் கடந்த 1937ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

