தூத்துக்குடி: இந்தியாவிலேயே தூத்துக்குடியில் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சூரிய ஒளி மின்நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் 75 ஏக்கர் பரப்பளவில் இரு பெரிய நீர்த்தேக்கங்களில் இந்த சூரிய ஒளி மின்நிலையம் அைமந்துள்ளது.
இந்நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 22 மெகாவாட் மின் உற்பத்தி தயாரிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
ரூ.150 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் ஆண்டுக்கு 42.0 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனை ஸ்பிக் தொழிற்சாலைகளிலேயே பயன்படுத்தும் விதத்தில் இந்த மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
நீரின் குளிர்ச்சியைச் சாதகமாக்குவதன் மூலம் அதிக மின் உற்பத்திக்கு மிதக்கும் சூரிய மின் நிலையம் வழிவகுக்கும். நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் ஆவியாகாமல் 60% அளவுக்குக் கட்டுப்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் நன்மைக்கும் இத்திட்டம் உதவும் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
தூத்துக்குடிக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் மறைந்த முன்னாள் முதல்வரும் தனது தந்தையுமான மு.கருணாநிதியின் வெண்கலச் சிலையைத் திறந்துவைத்தார்.
இதனைத்தொடர்ந்து, தூத்துக்குடியில் நாட்டின் முதல் அனைத்துலக அறைகலன் பூங்காவுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய முதல்வர், "தமிழ்நாட்டின் முன்னேற்றமே அரசின் இலக்கு," என்றவர், மக்களிடம் செல், மக்களுடன் வாழ் என்ற தாரக மந்திரத்துடன் தான் செயல்படுவதாகக் கூறினார்.
தூத்துக்குடி சிப்காட் வளா கத்தில் ரூ.1,000 கோடியில் 1,150 ஏக்கர் பரப்பளவில் மூன்றரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள அறைகலன் பூங்காவுக்கும் (பர்னிச்சர் பார்க்) முதல்வர் நேற்று அடிக்கல் நாட்டினார்.
அப்போது தூத்துக்குடியில் ரூ.4,488 கோடி மதிப்பீட்டில் 14 நிறுவனங்கள் தொழில் முதலீடு செய்தன. இதற்காக 33 நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.