சென்னை: குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் ரவுடிகள் 'என்கவுன்டர்' செய்யப்படுவார்கள் என சென்னை காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து ஆயிரம் ரவுடிகளைக் கொண்ட பட்டியலை தயார் செய்துள்ள காவல்துறை, ரவுடிகளுக்கு அடைக்கலமும் ஆதரவும் அளிப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை பாயும் என தெரிவித்துள்ளது.
சென்னையில் இதற்கு முன்பு சில ரவுடிகள் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் கொலைச் சம்பவங்களில் ஈடுபடும் இளையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பல இளையர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கவலை அடைந்துள்ள காவல் ஆணையர் சங்கர்ஜிவால், சென்னையில் உள்ள ரவுடிகளின் பட்டியலை முழுமையாக சேகரித்து தலைமறைவாக உள்ள ரவுடிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையடுத்தே ஆயிரம் ரவுடிகளைக் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் மின்னிலக்க வடிவில் சேகரிக்கப்பட்டுள்ளன.
இளம் ரவுடிகளை தீவிரமாகக் கண்காணிப்பது, அவர்களது முந்தைய குற்றச்செயல்களின் தன்மையை ஆராய்ந்து, அதற்கேற்ப கண்காணிப்பை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
காவல்துறைக்கு ஒத்துழைக்க மறுக்கும் ரவுடிகள் மீது 'என்கவுன்டர்' நடவடிக்கை மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சென்னையில் உள்ள ரவுடிகள் கலக்கத்தில் உள்ளனர். அவர்களில் பலர் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் மேற்கொள்ளும் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து கேள்விப்படும் பிற நகரங்களில் உள்ள ரவுடிகளும் அச்சத்தில் முடங்குவர் என காவல்துறை தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பல ரவுடிகள் இணைந்து குழுவாகச் (கேங்ஸ்டர்) செயல்படுவதையும் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அத்தகைய குழுக்களைச் சேர்ந்தவர்களும் அத்துமீறினால் நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இந்நடவடிக்கை மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடும் இளையர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

