தூத்துக்குடி: ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 41 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இந்தோனீசியா, செஷல்ஸ் தீவு கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
இரு வெவ்வேறு சம்பவங்களில் ஒருமுறை எட்டு பேரும் மற்றொரு முறை 33 பேரும் கைதாகி உள்ள னர். இதனால் கவலையடைந்து உள்ள மீனவர்களின் குடும்பத்தினர், செஷல்ஸ் தீவு, இந்தோனீசியாவில் சிறைபிடிக்கப்பட்டு உள்ள மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்தோனீசியா, செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் படி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வெளிமாநிலங்களிலும் வெளிநாடு களிலும் 15 முதல் 60 நாள்கள் வரை ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடித்து வருவது வழக்கம்.
கடந்த 7ஆம் தேதி இந்தோனீ சியா கடல் எல்லையைக் கடந்து ருஷா தீவில் மீன்பிடித்ததாகக் கூறி, குமரி மாவட்டம், தூத்தூரைச் சேர்ந்த எட்டு மீனவர்களை இந்தோனீசிய கடலோரக் காவல் அதிகாரிகள் கைது செய்தனர்.
அதேபோல், கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி கொச்சியில் இருந்து மூன்று விசைப்படகுகளில் கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், பூத்துறை, சின்னத் துறையைச் சேர்ந்த மீனவர்கள் உள்பட 33 பேர் மீன்பிடிக்கச் சென்றனர். சூறைக்காற்று காரணமாக திசைமாறி சென்றபோது செஷல்ஸ் தீவில் உள்ள ராணுவத்தினர் இவர்களை சிறைபிடித்தனர்.
இதற்கிடையே, இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த ஐந்து மீனவர்களைக் கடலோரக் காவல் படையினர் கைது செய்தனர். படகையும் பறிமுதல் செய்தனர். நேற்று அவர்கள் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர்.

