மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு
சென்னை: தமிழக அரசு ஒரு ரூபாய் செலவிட்டால், அது சிந்தாமல், சிதறாமல் மாநிலத்தின் கடைக்கோடி மக்களைச் சென்றடைய வேண்டும் என்றும் அதுதான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைய முடியும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் சென்னையில் நடைபெற்ற ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்றப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் அரசுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பொருள்கள் கிடைக்கும் நிலையில், அவற்றை எப்படிச் சந்தைப்படுத்துவது, அதன் மூலம் அரசுக்கான வருமானத்தை எப்படி பெருக்குவது என்பது குறித்த ஆலோசனைகளையும் அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
"விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில், பெருந்தொழில் உள்ளிட்ட, அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய திட்டங்களை சுதந்திரமாகத் தெரிவிக்கலாம்,
"மாவட்டங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்த கள நிலவரத்தை விரிவாக எடுத்துரைக்கலாம். அரசுத் திட்டங்களின் பயன் மக்களைச் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வது குறித்து தெரிவிக்க வேண்டும்," என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இம்மாநாட்டில், அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும் பல்வேறு மாவட்டங்களில் அந்தத் திட்டம் எந்த அளவில் உள்ளது, மாவட்ட நிர்வாகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, சமூக வலைத் தளங்கள் மூலம் சாதி, மத மோதல்கள் ஏற்படுத்த நினைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் காவல்துறையைக் கேட்டுக்கொண்டார். சாதி மோதல்களை சட்டம், ஒழுங்குப் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், அவற்றை சமூக ஒழுக்கப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு அவர் அறிவுறுத்தினார்.
கிராமங்களில் படிக்காத இளைஞர்களால் மட்டுமல்லாது, படித்துவிட்டு வேலையில்லா இளைஞர்களாலும் இம்மாதிரியான சாதி மோதல் பிரச்சினை உருவாகிறது என்றும் மத மோதல்களைத் தடுப்பதற்கான காவல்துறை பிரிவை கோவை மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த ஆலோசிக்கப்படும் என்றும் முதல்வர் மேலும் கூறினார்.
குற்றங்களின் விழுக்காட்டை குறைப்பதைவிட குற்றங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், தவறு செய்தவர்கள் யாரும் தண்டனையிலிருந்து தப்பிவிடக்கூடாது என்றும் தடை செய்யப்பட்ட இயக்கங்களை தமிழகத்தில் நுழைய விடாமல் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்றும் கூறினார்.

