சென்னை: உக்ரேனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்களை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவேற்றார்.
மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றதுடன், அவர்களின் உடல்நலம் குறித்தும் விசாரித்தறிந்தார்.
உக்ரேனில் போர் தீவிரமடைந்த நிலையில், அங்கு படித்து வந்த நூற்றுக்கணக்கான தமிழக மாணவர்களை மீட்க வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும் தமிழக அரசின் சார்பில் மாணவர்களை மீட்பதற்கு என சிறப்புக்குழுவும் அமைத்தார். அந்தக் குழுவில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
டெல்லியில் முகாமிட்ட இக்குழுவினர், தமிழக மாணவர்களுக்குப் பல்வேறு வகையிலும் உதவிகளைச் செய்ததுடன், பத்திரமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், உக்ரேனில் இருந்து மீட்கப்பட்டு டெல்லியில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழக மாணவர்களின் கடைசிக்குழு நேற்று முன்தினம் சென்னை வந்தடைந்தது. அவர்களை முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றதுடன், அவர்களுடைய பயணம் எப்படி இருந்தது எனக் கேட்டறிந்தார். மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என அவர் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, நாடு திரும்பும் முன்னர் தமிழக மாணவர்கள் மொழிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சங்கடங்களை எதிர்கொண்டதாகவும் டெல்லி வந்தடைந்த பின்னர் தமிழக அரசு அதிகாரிகள் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ததாகவும் கூறினார்.

