செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
354ac6b5-2549-41b2-b0c0-63f5208612cd
-

தொழில்நுட்ப ஆலோசனைக் குழு: டிசம்பர் வரை முகக்கவசம் கட்டாயம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுப்பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்துள்ள போதிலும் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை முகக்கவசம் அணிவது கட்டாயம் என தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தமிழக அரசிடம் அறிவுறுத்தி உள்ளது. தொற்றுநோய் பரவல் முற்றிலும் முடிவுக்கு வந்துவிட்டதாக உறுதி செய்யப்படும் வரை பொதுமக்கள் சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது நல்லது. ஜூன், அக்டோபர் மாதங்களுக்குப் பிறகு கொரோனா நான்காவது அலை எழக்கூடும் என கணிப்புகள் உள்ளன. அதன் பிறகு குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகளை பொதுமக்கள் தாமே பின்பற்ற வேண்டும்," என தொழில்நுட்ப ஆலோசனைக் குழு மேலும் தெரிவித்துள்ளது.

அண்ணா மேம்பாலம் ரூ.9 கோடி செலவில் புதுப்பிக்கப்படுகிறது

சென்னை: கடந்த 1971ஆம் ஆண்டு சென்னையில் கட்டப்பட்ட அண்ணா மேம்பாலத்தை ஒன்பது கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மொத்தம் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் 250 அடி நீளம் 48 அடி அகலத்தில் அந்த மேம்பாலம் கட்டப்பட்டது. சுமார் 21 மாதங்களில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து 1973ஆம் ஆண்டு ஜூலை முதலாம் தேதியன்று அந்த மேம்பாலம் திறப்புவிழா கண்டது. அப்போது இந்திய அளவில் ஆகப் பெரிய மேம்பாலங்களில், சென்னையின் அடையாளமாகத் திகழும் அண்ணா மேம்பாலம் மூன்றாவது இடத்தில் இருந்தது. இந்நிலையில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டு

50 ஆண்டு தொடங்குவதையொட்டி மேம்பாலத்தை புதுப்பித்து அழகுபடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரூ.9 கோடி செலவில் அண்ணா மேம்பாலம் புதுப்பிக்கப்படுகிறது. மேலும் மேம்பாலத்தை ஒட்டி, பல்லவர் கால பாணியில் செதுக்கப்பட்ட ஆறடி உயர சிங்கம் சிலை அழகிய வடிவமைப்புடன் நிறுவப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு திரும்ப முடியாமல் தி.மலையில் தங்கியுள்ள 22 உக்ரேனியர்கள்

தி.மலை: உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 22 பேர் நாடு திரும்ப முடியாமல் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் அங்கு தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சத்யன் என்பவர் தனக்குச் சொந்தமான விடுதியில் தங்கவைத்து அவர்களுக்கு இலவச உணவும் உடைகளும் அளித்து தங்கவைத்துள்ளார். இந்நிலையில், இவர்களது விசா காலம் முடிவுக்கு வர இருப்பதாகவும் அனைவரையும் அரசு தங்குவிடுதிகளில் தங்கவைத்து தேவையான உதவிகளைச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் 25 மீனவர்களைக் கைது செய்த செஷல்ஸ் தீவு பாதுகாப்பு அதிகாரிகள்

குமரி: செஷல்ஸ் தீவு பாதுகாப்பு அதிகாரிகளால் மேலும் 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஏற்கெனவே 33 இந்திய மீனவர்களை செஷல்ஸ் அதிகாரிகள் சில தினங்களுக்கு முன் கைது செய்தனர். அவர்களில் 20 பேர் தமிழக மீனவர்கள் என்றும் 13 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. இந்நிலையில், மேலும் 25 மீனவர்கள் கைதாகி உள்ளனர்.

கள்ளுக்கடைகள் திறக்க வலியுறுத்து

சென்னை: பனை, தென்னைத் தொழில்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் விரைவில் கள்ளுக்கடைகள் திறக்கப்பட வேண்டும் என விவசாயிகள் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். கேரளாவில் கள்ளுக்கடைகளில் 80 முதல் 100 ரூபாய் வரை கள் விற்பனை செய்யப்படுகிறது என்றும் அதேபோல் தமிழகத்திலும் கள்ளுக்கடைகள் திறக்கப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.