சென்னை: தமிழகப் பள்ளிகளில் நிகழும் பாலியல் தொல்லை உள்ளிட்ட சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற செயல்பாடுகளை நீதிமன்றம் பொறுத்துக்கொள்ளாது என்றும் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், பாலியல் தொல்லை தருவோர் தப்பி வருகின்றனர் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நீதியை நிலைநாட்ட நீதிமன்றம் எந்த எல்லைக்கும் செல்லும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மதுரையில் உள்ள ஜெயா ஆரம்பப் பள்ளியில் பணியாற்றி வந்த இரு ஆசிரியைகள் வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன், இந்தப் பணியிட மாற்றல் உத்தரவுக்குத் தடைவிதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மனுதாரரான பள்ளித் தலைமை ஆசிரியர் மீது அப்பள்ளியில் நியமனம் செய்யப்படும் ஆசிரியைகள் பெரும்பாலானோர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், தற்போது பாதிக்கப்பட்டுள்ள இரு ஆசிரியைகளுக்கும் மனுதாரர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததாக அவர்கள் புகார் அளித்தனர் என்றும் அதன்அடிப்படையில் இடமாறுதல் செய்யப்பட்டதாக அரசுத்தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
"கல்வி நிறுவனங்களில் இருந்து தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வழக்கில் மனுதாரரால் பாதிக்கப்பட்ட இரு பெண் ஆசிரியைகளும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய புகார் அடிப்படையில், கீரைத்துறை காவல்துறையினர் மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்து உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும்.
"ஆசிரியைகள் இருவரும் இடமாறுதல் செய்யப்பட்ட பள்ளியில் பணியில் சேர வேண்டும். அவர் அளித்துள்ள பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை விசாரிக்க, மாவட்ட கல்வி அலுவலர் தனிக் குழுவை அமைக்க வேண்டும்," என்று உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.