சென்னை: நில அபகரிப்பு தொடர்பான அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உயர் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அவர் மீது போடப்பட்ட மூன்று வழக்குகளில் ஏற்கெனவே இரண்டு வழக்குகளில் அவர் பிணை பெற்றுள்ளதை அடுத்து, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், திமுக அரசு வேண்டும் என்றே தம் மீது பொய் வழக்குகளைத் தொடுத்துள்ளதாகச் சாடினார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள வாக்குகளைச் செலுத்த முயன்ற திமுகவினரைத் தடுத்ததால் தாம் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
"ஹிட்லரின் மறு உருவம்தான் முதல்வர் ஸ்டாலின். ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.
"முன்னாள் அமைச்சர்கள் மீது மட்டுமே திமுக அரசு கவனம் செலுத்துகிறது. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுக்கு நல்லது எதுவும் செய்யவில்லை," என்றார் ஜெயக்குமார்.
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது திமுக உறுப்பினரைத் தாக்கியது தொடர்பாக ஜெயக்குமார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவானது. பி்ன்னர் காவல்துறை அனுமதி இன்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்விரு வழக்குகள் தொடர்பில் நீதிமன்றம் மூலம் பிணை பெற்றுள்ளார் ஜெயக்குமார். இந்நிலையில் நில அபகரிப்பு வழக்கிலும் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.