முப்பதாவது கட்டுநர்கள் சங்க மாநாட்டில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: ஏழை, எளிய, நலிந்த மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகளைக் கட்டித் தர கட்டுமான நிறுவனங்கள் முன்வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
கட்டுநர்கள் தமிழக அரசுக்கு தூண்கள் போல துணை நிற்க வேண்டும் என்றும் 30ஆவது அனைத்திந்திய கட்டுநர் மாநாட்டில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
தமிழக அரசின் கட்டடங்களை தரமாகவும் வலிமை மிக்கதாகவும் கட்டிக்கொடுத்து அரசுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்றார் முதல்வர்.
"வழக்கமாக, ஒரு கட்டடத்திற்கு தூண் வலு சேர்க்கும் என்று சொல்வார்கள். நீங்கள் மாநில அரசின் கட்டடங்களை தரமாகக் கட்டுவதில் வலுசேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
"கொரோனா காலத்தில் எத்தகைய சவால்களை இந்த கட்டுமான தொழில் சந்தித்து வருகிறது என்பது இந்த அரசுக்கு நன்றாகவே தெரியும்.
"அதனால்தான் ஆட்சிக்கு வந்தவுடன் பொதுப்பணித்துறையில் தொகுப்பு முறையிலான ஒப்பந்தப்புள்ளி நடைமுறை ரத்து செய்யப்பட்டது," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கட்டுநர் சங்கத்தின் சென்னை மையம் மட்டுமே இருநூறாயிரத்துக்கும் மேற்பட்ட அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கும் நூறாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் மையமாக விளங்குகிறது என்று குறிப்பிட்ட அவர், கொரோனா நெருக்கடி காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அம்மையம் செய்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது என்றார்.
"சொன்னதை மட்டுமல்ல, செய்வதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி. ஏனென்றால் தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள். ஆனால் பதினாறு அடி பாய்ந்தால் அது எங்கள் தலைவருக்கு (கருணாநிதி) பெருமை அல்ல, 32 அடி பாயவேண்டும். அது தான் நாங்கள் அவருக்கு தரும் பெருமை," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
இதற்கிடையே, சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை காப்பாற்றும் இயக்கம் திமுக என்றார்.
தமிழர் என்றால் ஒரு உணர்வு வரும் எனவும் அது உள்ளூர் தமிழர் என்றாலும் சரி உக்ரேனில் இருந்தாலும் சரி எனவும் அவர் குறிப்பிட்டார்.
"நாட்டில் வேறு எந்த மாநிலமும் செய்திராத வகையில், தமிழ்நாட்டில் மட்டும் தான் மீட்பு குழு அமைத்து உக்ரேனில் இருந்து மாணவர்களும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
"உலகின் எந்த மூலையில் உள்ள தமிழர்கள் என்றாலும் அவர்களைக் காப்பாற்ற திமுக இயக்கம் நடவடிக்கை எடுக்கும்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

