சென்னை: ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல் என்ற பாறை எரிவாயு போன்ற நாசகரமான திட்டங்களைத் தமிழகத்தின் மீது ஒன்றிய அரசு திணித்துவருவது கண்டனத்திற்குரியது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இதுபோன்ற அபாயகரமான திட்டங்களால் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு, சுற்றுச் சூழலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும் என்றும் மண்ணை மலடாக்கி, சுற்றுச்சூழலை நாசமாக்கும் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற திட்டங்களை எதிர்த்து தமிழக மக்கள் போராடி வரும் நிலையில், தமிழகத்தில் ஒன்பது இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கோரி 'ஓஎன்ஜிசி' நிறுவனம் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்க மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி உள்ளார்.
"காவிரி டெல்டா பகுதி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு பரிந்துரை செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
"மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய, பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் அமைக்கப்பட்ட குழு நான்கு மாத கள ஆய்வின் 106 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் அளித்துள்ளது.
"அதில் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் காவிரிlg படுக்கை பகுதியில் உள்ள நிலம், நீர், காற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அப்பகுதியில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அறிவியல் ரீதியிலான ஆதாரங்களுடன் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது," என்று ஜவாஹிருல்லா தமது அறிக்கையில் கூறியுள்ளார்.